டெல்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நேரில் ஆஜராக டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி,  மே 8-ஆம் தேதி  விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு’ ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதன் பதிப்பு நிறுவனமான ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்து விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.  அதனால் அவர்கள் மோசடியாக அந்த நிறுவனத்தை 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை  2021ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் விசாரணையில்,  நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வாங்கியதில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக கூறியதுடன், இந்த வழக்கில் சுமார் 988 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சியின்  ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.  தொடர்ந்து,  நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த சூழலில் ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், இருவரும் மே.8ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரிக்கும் உரிமையை வழங்குவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். “எந்த கட்டத்திலும் விசாரிக்கப்படும் உரிமை நியாயமான விசாரணைக்கு உயிர் கொடுக்கும்” என்று நீதிபதி கோக்னே குறிப்பிட்டார், அடுத்த விசாரணையை மே 8 ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,   மத்திய அரசு,  அமலாக்கத்துறை மற்றும் மத்திய  புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் கருவிகளாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியதுடன்,  இது காங்கிரஸ் கட்சி மீதான “பழிவாங்கும் எண்ணம்” என்று கூறயதுடன், இந்த சலசலப்புகளுக்கு காங்கிரஸ்  கட்சி அஞ்சாது என்று கூறினார்.

மேலும், “ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய ஹெரால்டு வழக்கில் சிபிபி தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்,” என்று திரு கார்கே கூறினார்.