மேற்கு டெல்லியில் உள்ள கிடங்கில் இருந்து 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் விலை சுமார் ரூ. 2,400 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ரூ.2400 கோடி மதிப்புள்ள கோகோயின் பிடிபட்டது. ஏற்கனவே ரூ. 6500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான கொலம்பியன் கொக்கைன் பிடிபட்டுள்ளது.
இதுவரை நாட்டில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில் இதுவே மிகப்பெரிய வழக்கு என்று கூறப்படுகிறது.
இந்த கடத்தல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே இந்த கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், பண்டிகை மற்றும் பார்ட்டி சீசனை ஒட்டி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் இலக்காக டெல்லி உள்ளதும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் பலரை தேடி வரும் நிலையில் இந்த கடத்தல் விவகாரத்தில் பொழுதுபோக்கு உலகின் சில பெரிய ஆளுமைகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கொலம்பியாவில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு பழைய சரக்கு கப்பலில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் சென்னையில் இருந்து ஹாபூருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.