மும்பை
பி எம் சி வங்கியில் ரூ.90 லட்சம் முதலீடு செய்த ஒரு 51 வயது ஆண் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் மரணம் அடைந்துள்ளார்.
பி எம் சி வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் வாராக்கடன் அதிகரித்ததால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதையொட்டி ரிசர்வ் வங்கி புதிய கடன் அளிக்கத் தடை விதித்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்குத் தினசரி ரூ.1000 என மாதம் ரூ.25000 மட்டுமே பணம் எடுக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
மும்பை ஒஷிவாரா பகுதியில் உள்ள தாராப்பூர் கார்டன் பகுதியில் சஞ்சய் குலாடி என்னும் 51 வயதுடையவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும் இரு சின்னக் குழந்தைகளும் உள்ளன. இவரும் இவருடைய தந்தையும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். தற்போது இந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் இருவரும் பணி இழந்துள்ளனர்.
பிஎம்சி வங்கியின் ஒஷிவாரா கிளையில் சஞ்சய் குலாடி ரூ.90 லட்சம் முதலீடு செய்திருந்தார். தற்போது பணி இன்றி இருக்கும் இவருக்கு வங்கி முதலீடு திரும்பக் கிடைப்பதும் கேள்விக்குறி ஆனதால் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இந்த வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். போராட்டத்தில் கலந்துக் கொண்ட சஞ்சய் மற்ற வாடிக்கையாளர்கள் கதறுவதைக் கண்டு மேலும் துயருற்றுள்ளார்.
மாலை சுமார் 3.30 மணிக்கு வீடு திரும்பிய சஞ்சய் 4.45 மணி வரை உறங்கி உள்ளார். அதன் பிறகு அவர் எழுந்து மனைவியிடம் உணவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். உணவு அருந்திக் கொண்டிருக்கையில் திடீரென கீழே விழுந்து அங்கேயே மரணம் அடைந்துள்ளார். நல்ல ஆரோக்கியமாக இருந்தவர் இவ்வாறு திடீரென மரணம் அடைந்தது அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தகவல் அறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாகச் சொல்லி உள்ளனர். அவர் மரணம் அடைந்ததை அறிந்த அவர் மனைவி ஒரு கற்சிலை போல் அமர்ந்துள்ளார். அவருடைய பெற்றோர்கள் தற்போது பெங்களூருவில் இருந்து மும்பை வந்துள்ளனர். அவர்களின் கதறல் அனைவரின் நெஞ்சையும் உருக்கி உள்ளது.