டில்லி

ங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் கடவுள் சிலைகளைக் கரைக்கத் தடை விதித்த அரசு தடையை மீறினால் ரூ.50000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கங்கை நதி மாசடைவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   இந்தியாவின் மிகப் பெரிய நதிகளில் ஒன்றான கங்கை நதி நாட்டின் புனித நதி எனக் கூறப்படும் வேளையில் இந்த நதியை மாசுபடுத்துவதும் தொடர்ந்து வருகிறது.  தற்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் கங்கை நதி நீர் நேரடியாகக் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலையில் உளது தெரிய வந்துள்ளது.

இந்த கங்கை நதியில் பண்டிகைக் காலங்களில் கடவுள் சிலைகள் கரைக்கப்படுவது பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.   நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி காலங்களில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது போல் வட மாநிலங்களில் தசரா, துர்க்கா பூஜை, தீபாவளி ஆகிய நாட்களிலும் அம்மன் சிலைகள் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

நமாமி கங்கை என்னும் பெயரில் மத்திய அரசு கங்கை நதி சுத்திகரிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது.  இந்த திட்டத்தின் கீழ் நதி மாசடைவதைத் தடுக்க 15 அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அவற்றில் முக்கியமானது கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் கடவுளர் சிலைகளைக் கரைக்கக் கூடாது என்பது ஆகும்.   இதையொட்டி உத்தரகாண்ட்,  உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்குக் கடந்த மாதம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கங்கை மற்றும் கிளை நதிகளில் அழிக்க முடியாத பொருட்கள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்,  சுட்ட களிமண், செயற்கை இழை, தெர்மாகோல் ஆகியவற்றில் செய்யப்பட்ட சிலைகளைக் கரைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் மாசு உண்டாக்கும் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட சாயம் பூசப்பட்ட சிலைகளைக் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை குறித்து மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை விழா முடிந்த 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மாநிலங்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.   அத்துடன் தடையை மீறிச் சிலையைக் கரைப்போருக்கு வாரியம் ரூ.50000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.