சென்னை: “ரூ.500 கோடி திமுக ஊழல் மறைத்து மக்களை டைவர்ட் பண்ண ரெய்டு” நடத்துகிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆவேசமாக குற்றம் சாட்டினார். அதுபோல திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கிலும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கிலும் விடியா திமுக அரசு ஈடுபட்டுவருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் ரெய்டு குறித்து செய்தியாளர்களிடம்  கூறிய  அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமி,  “திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. இவற்றை திசைதிருப்பவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகங்களை திமுக அரங்கேற்றி வருகிறது. கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்ற இந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் 75 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எந்த முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாத காரணத்தால் மலையளவு அதிகரித்துள்ளது” என்றார்.

முன்னாள் அதிமுக  அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்  ர் கே.பி. அன்பழகன் வீடு, அவருக்குத் தொடர்புடைய சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கே.பி. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக ரூ.11.32 கோடி சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீன் மெடோஸ் சாலையில் அமைந்துள்ள அன்பழகனின் உறவினரான சிவகுமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அங்கு சென்ற அமைச்சர், ரெய்டு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், அதிமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்ற மாயபிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த காவல் துறையை திமுக அரசு ஏவிவிட்டு சோதனை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கிலும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கிலும் விடியா திமுக அரசு இது போன்ற செயலில் ஈடுபட்டுவருவதாக கூறியவர்,  பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக அரசு வழங்கிய பரிசுப் பொருள்கள் தரமற்று கிடந்ததாகவும், பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் கொட்டும் அளவுக்கு இருந்ததால் அதை மறைக்கவே இந்த சோதனையை விடியா அரசு மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும்,  திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் திராணி இருந்தால் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர், மீண்டும் தேர்தலி நடத்தினால் ஒரு இடத்தில்கூட திமுக வெற்றிபெற முடியாது எனச் சவால் விட்டவர், எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனைக்கு வரலாம் என்றார்.

திமுக அரசு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் காவல் துறையை ஏவி சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாகவும், கருத்துச் சுதந்திரம் பறிபோகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.