சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்து தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட இருப்பதாக, காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக காவல்துறை விசாரித்து வரும் நிலையில், தற்போது ரூ.50லட்சம் பரிசு வழங்க இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சியில் வசித்து வந்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான தொழிலதிபர் ராமஜெயடம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ந்தேதி கொடுமையாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது ஆணறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி கல்லணை  அருகே உள்ள காட்டில் தூக்கி வீசப்பட்டிருந்தது. இந்த சம்பவம் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தின்போது நடைபெற்றது. இந்த கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல்துறை  12 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிபிஐ-யும் விசாரணை நடத்தியது. கொலை தொடர்பாக துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்காத நிலை யில், மீண்டும் மாநில காவல்துறையினர் விசாரணைக்கே மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,   அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிதாக துப்பு கிடைத்துள்ளது, எனவே விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளதுடன்,  கொலையாளிகளை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையின்போது, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம் ஜூன் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.