சென்னை: திருவண்ணாமலையில் புயல்மழையின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
விழுப்புரம் அருகே கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் இதுவரை 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர். இவர்களை மீட்கும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், தேசிய மீட்பு படையினர் நேற்றிலிருந்து தீவிரமாக ஈடுபட்ட நிலையில், அவர்கள் 7 பேரும் உயிரிழந்த நிலையில்தான் மீட்கப்பட்டனர். இது இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நிதிஉதவியும் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் .
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.