சென்னை: விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதுபோல திருச்சி விமான நிலையத்தில், பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் குழுவினர் , விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று சோதனை செய்தனர்.
அப்போது, விழுப்புரம் அருகே உள்ள பகண்டை சாலையில் சகாய செல்வம் என்பவரின் பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 24 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் சகாய செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் புதுச்சேரி மாநிலம் கொத்தம்புரி நத்தம் கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் சிவகுமார் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 110 கிலோ எடை கொண்ட புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய செல்வம், சிவக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையம் வந்த கேரள பயணி ஒருவரிடம் அங்கிருந்து வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், கஞ்சா கடத்தப்பட்டுவந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஹாங்காக் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் விமான நிலையத்தில் உள்ள வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது, அதனுள் உயர் ரக கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக அதை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.