லக்னோ:

ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை உ.பி. அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் அதிகமாகும்.

உ.பி. சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், ‘‘மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 384 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீம் அதிகம். இதில் பண்டெல்காந்த் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு ரூ. 650 கோடி, கோராக்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் சாலைக்கு ரூ. 550 கோடி, புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு ஆயிரம் கோடி ரூபாய், ஆக்ரா-லக்னோ சாலைக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

பட்ஜெட் சிறப்பம்சங்கள்…..

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ரூ. 30 கோடி செலவில் மின்னணு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ஆரம்ப நிதியாக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் துறைக்கு 29 ஆயிரத்து 883 கோடி ரூபாயும், கும்ப மேளாவுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை கல்வி துறைக்கு 18 ஆயிரத்து 167 கோடி ரூபாயும், அனைவருக்கு கல்வி திட்டத்துக்கு ரூ. 76 கோடி ரூபாயும், இலவச புத்தகம், சிருடைகளுக்கு ரூ. 40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்துக்கு 2 ஆயிரத்து 48 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு பழங்கள் வழங்க ரூ.167 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை கல்வி பள்ளிகளுக்கு பர்னிச்சர், குடிநீர், சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 500 கோடியும், இடைநிலை கல்வி மேம்பாட்டிற்கு ரூ. 480 கோடியும், தீன தயாள் உபத்யா அரசு மாதிரி பள்ளிகளுக்கு ரூ.26 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘பட்ஜெட்டில் வளர்ச்சி சார்ந்த, மேம்பாட்டு திட்டங்கள் அதிகம் நிறைந்துள்ளது. உ.பி மாநிலம் மிக வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக திகழும்’’ என்றார்.