அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் நிர்வாகி வினீத் ஜெயின் உள்ளிட்ட 8 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான செய்தி வெளியான பிறகு அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
நவம்பர் 22 முதல் இதுவரை அதானி குழும நிறுவனங்கள் சுமார் 54 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் மற்றும் மற்றொரு முக்கிய நிர்வாகி ஆகியோர் சூரிய சக்தி மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 பிரிவுகளின் கீழு குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அதானி நிறுவன இயக்குனர்களான, கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் FCPA ஐ மீறுவதற்கான சதி மற்றும் நீதி வழங்குவதில் தடை உண்டாக்குதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
இதனையடுத்து, அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட், அதானி பவர் லிமிடெட், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் உள்ளிட்ட அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் 5% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.