சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்வி களுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் நியமனம், திருப்பரங்குன்றம் ரோப் கார் சேவை, மாவட்ட அளவில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை, கருப்பை வாய் தடுப்பூசி செலுத்த ரூ.37 கோடி ஒதுக்கீடு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழ்நாடு அரசின்  சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த (மார்ச்)  14ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் ஏற்கனவே இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, இன்று முதல், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (மார்ச் 24) தொடங்குகிறது.

இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக,  இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.  கேள்வி நேரத்தின்போத உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அங்கன்வாடி பணியாளர் நியமனம் தொடர்பான கேள்விக்கு  பதில் கூறிய அமைச்சர் கீதா ஜீவன்,  அங்கன்வாடிகளில் புதிதாக  7900   பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.

மேலும்,  8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

பாமக எம்.எல்.ஏ. அருள்  சேலத்தில் சுற்றுச்சாலை அமைப்பது தொடர்பான எழுப்பிய கேள்விக்கு  பதில் கூறிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ,  “சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது என்றார்.

மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்கம்பிகளை மாற்ற பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு” கோரிக்கை விடுத்தார்.  இதற்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது, 3 புதிய துணை மின்நிலையம் அமைய உள்ளது. தாழ்ந்த நிலையில் உள்ள மின்கம்பியை மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்லூர் ராஜு கேள்விக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.

தேனி – மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள்  மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என  ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் வேலு, இந்த பணிகள் தொடர்பான,  கோரிக்கை ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

“பவானிசாகர் ஆற்றுப் பகுதியில் சாயப்பட்டறை இயங்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும்” என அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கோரிக்கை  வைத்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு.  “பவானி ஆற்றின் கரையில் இருந்து 500 மீ தூரத்தில், சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்தும் சில புகார்கள் வந்துள்ளன. ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறும் ஆலைகள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கே.வி.குப்பம்  எம்எல்ஏ பேசும்போது,   வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி, அன்னங்குடி, திருமணி, விழுந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். திருமணி-மேல்மொணவூர் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவேண்டும் என கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள்  வேலூருக்கு வந்து செல்ல, சுமார் 12 கிமீ தூரம் கடந்து லத்தேரி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து காட்பாடி வழியாக வேலூர் வரவேண்டிய நிலை உள்ளது. இதுதவிர 5 கிமீ தொலைவில் திருமணி-மேல்மொணவூர் இடையே உள்ள பாலாற்று மண் பாதையும் உள்ளது. இந்த வழியாக தண்ணீர் வரத்து இல்லாதபோது மட்டுமே செல்ல முடியும். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், சுமார் 12 கிமீ தூரம் காட்பாடி வழியாக வேலூர் செல்ல வேண்டி உள்ளது அதனால், அந்த பகுதியில் விரைவில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன் என எம்.எல்.ஏ. சுதர்சனம்  எழுப்பிய கேள்விக்கு,  நிச்சயம் பிரிக்க வாய்ப்பு உள்ளது  வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கைகள் பல வந்திருக்கின்றன. நிதி நிலைக்கு ஏற்ப இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வரும் ஜூலை 16ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தகவல் திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் சேவை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் தொடகும் எனவும் அமைச்சர் கூறினார்.

உறுப்பினரின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் கூறிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  வருவாய் மாவட்ட அளவில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை  நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் உள்பட அனைத்து புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை இன்னும் 10 நாட்களில் வருவாய் மாவட்ட அளவில் தொடங்க இருப்பதாகவும், இளம் சிறுமிகளுக்கு வரும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க எச்பிவி (HPV) தடுப்பூசி செலுத்த ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு பதில்கூறிய அமைச்சர் நேரு,  கழிவு நீரை சுத்திகரித்தால் 100 லிட்டரில் 6-7 லிட்டர்தான் கழிவாக மிஞ்சும். மீதமுள்ள நீர், நல்ல நீராகத்தான் இருக்கிறது. சிங்கப்பூரில் இவ்வகை சுத்திகரிப்பு நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு நம் மக்கள் சுத்திகரிப்பு நீர், குடிநீராக வழங்க வேண்டாம் என்கின்றனர். இதனால், அதனை ஆற்றிலேயே விடலாமா அல்லது விவசாயத்திற்கு வழங்கலாமா என்பதை அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.