சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கிடைத்தது என்ன? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், ரூ.34 லட்சம் ரொக்கப்பணம், ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், மணல் குவியல், ஆவணங்கள் என ஏராளமானவைகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ரூ.90 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, காவல்துறையின் முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய அமைச்சர்கள்மீது தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலிடம் பலமுறை ஊழல் புகார் பட்டியல் கொடுத்திருந்தார். ஆனால், அதன்மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் கவர்னர் கிடப்பில் போட்டிருந்தார். இதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிமுக அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கே.சி.வீரமணி மீதும் ரூ.90 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, கே.சி.வீரமணி மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதில் அவர் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரது வீடு மற்றும் அவரத உறவினர்கள், நண்பர்கள், அவரது நிறுவனங்கள் என அவருக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சென்னை சாந்தோமில் உள்ள வீரமணியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. பெங்களூருவில் உள்ள கே. சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூரில் 15 இடங்கள், சென்னையில் 4 இடங்கள் உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகிறது. திருப்பத்தூரில் உள்ள கேசி வீரமணியும் நட்சத்திர ஹோட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீரமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷின் திருப்பத்தூரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு மற்றும் திருமண மண்டபத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூரில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி அருகே வசந்தம் நகரில் இருக்கும் கே.சி.வீரமணியின் ஆதரவாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் இருக்கும் நாட்றம்பள்ளி அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், ரெய்டில் நடைபெற்று வருவது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
கே.சி.வீரமணி பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது சம்பந்தமாக கடந்த 15ஆம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், , “கே.சி.வீரமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது ரூ.34 லட்சம் ரொக்கப்பணம், ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 623 சவரண் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள் 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டன. மேலும், கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கே.சி.வீரமணி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் கே.சி.வீரமணி. 2013ம் ஆண்டில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். அதன்பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆனார். 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.