டில்லி:
2வது முறையாக பதவி ஏற்றுள்ள மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு நிவாரணம் உள்பட பல சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், 60 வயதை கடந்த சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை தொடர்ந்து, மோடி தலைமையில் மீண்டும் புதிய மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், பல்வேறு சலுகைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயி களுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவுபடுத்தவும், சிறு வனிகர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்:
முதல் தீர்மானமாக, வீரமரணமடைந்த பாதுகாப்பு படையினரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயிர்தியாகம் செய்த வீரர்களின் பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆண் வாரிசுகளுக்கான உதவித்தொகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் பெண் வாரிசுகளுக்கான உதவித்தொகை 2250 ரூபாயிலிருந்து3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாநில போலீஸ் பணியில் இருந்து, நக்ஸலைட்கள் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது,
சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் விரிவாக்கமாக அனைத்து விவசாயி களுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
5 கோடியே 77 லட்சம் விவசாயிகளுக்கு 2 கட்டங்களாக பணம் கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது, 5 ஏக்கர் என்ற வரம்பை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்.
60 வயதை எட்டும் சிறுவணிகர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் வகையிலான பென்ஷன் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 கோடி சிறுவணிகர்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் வணிகர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டோராக இருக்கவேண்டும்.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக ஜிஎஸ்டி செலுத்தும் வியாபாரிகள் ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் பொது விநியோக மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கான பிரீமியத் தொகையில் பாதியை மத்திய அரசு செலுத்தும். மீதத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும். தகுதியான வணிகர்களின் வங்கிக்கணக்குகளில் பென்ஷன் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.