சென்னை: திருவாரூரில் பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி அளிக்கப்படம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெருகவாழ்ந்தான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம்.ராஜேந்திரன் (வயது 52) என்பவர் கடந்த 5-ந்தேதி அன்று பணியின் நிமித்தமாக மண்ணுக்குமுண்டான் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்போது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள சித்தமல்லி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட காகிதக்காரத் தெருவில் வசித்து வந்தவர்கள் சந்திரசேகரன், விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சந்திரசேகரன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
சந்திரசேகரன் வழக்கம்போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற நிலையில், மதிய உணவு அருந்திவிட்டு தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பணியின் போது மாரடைப்பில் உயிரிழந்த 58 வயதான சந்திரசேகரன் இதற்கு முன்பு கூத்தாநல்லூர் காவல் நிலையம், திருவாரூர் தாலுகா காவல் நிலையம், நிலைய எழுத்தராக பணிபுரிந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.