சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 4 வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
தீபாவளியன்று இராணிப்பேட்டை மாவட்டம் கலவை என்ற பகுதியை அடுத்து அமைந்துள்ளது மாம்பாக்கம். இங்கு ரமேஷ் – அஸ்வினி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் நவிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகையான (நேற்று) குடும்பத்தினர், அக்கம் பக்கமுள்ள சிறுவர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிறுமியின் பெரியப்பா சிறுமியுடன் சேர்ந்து வெடி வெடித்துக்கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு வெடி சட்டென்று சிறுமி மீது படவே, சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். சிறுமி மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதை பார்த்து பதறிய குடும்பத்தினர், மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பட்டாசு வெடித்து உயிரிழந்த 4வயது சிறுமியின் குடும்பத்திற்கு தல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திகுறிப்பில், “இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) த/பெ.ரமேஷ் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த திரு.விக்னேஷ் என்பவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.