சென்னை
தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி 10000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 10.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இதையொட்டி தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலர் இன்று ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழக பொதுச் சுகாதார சட்டப்படி முகக் கவசம் அணியாமை, தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமை பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகிவை தவறான பழக்கமாகும்..
எனவே தலைமை செயலக வளாகத்துக்குள் எச்சில் துப்பினாலும் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தாலும் ரூ. 500 அபராதம் மற்றும் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.