சென்னை: தமிழக விவசாயிகள் பம்பு செட்டுகளை வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், “விவசாயிகளின் நலனுக்காக, மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக, புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வாங்குவதற்கான மானியத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை வழங்கி வருகிறது.
5ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது திறன்குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து சொந்தமாக மின் இணைப்பு பெற்று புதிய மோட்டர் அமைக்க விரும்பினாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இத்திட்டத்தில் 5 ஆயிரம் சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு இலக்காக 1000 பம்பு செட்டுகள் வழங்குவதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேண்டிய ஆவணங்கள் :
இதுவரை நுண்ணீர்ப் பாசன அமைப்பினை நிறுவிடாத விவசாயிகள் ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்ற ஆவணங்களுடன் உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம், மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் நிறுவியுள்ள விவசாயிகள், மின் இணைப்பு சான்றிதழ் மற்றும் புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளியுடன் வருவாய் கோட்ட அளவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS) பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் விபரம்:
அதிக நீர் இறைக்கும் திறன் கொண்ட 4 ஸ்டார் தரத்திற்கு குறைவில்லாத 19 மின்மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் 196 மாடல் மின் மோட்டார் பம்புசெட்டுகளுக்கு வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் மாடல்களின் விபரங்களை
https://aed.tn.gov.in/media/filer_public/ae/6d/ae6d6917-a61b-4594-a7c8-40a03354541b/chabbi-metadata.pdf
அல்லது
https://tnhorticulture.tn.gov.in:8080/dXrUJSnG2k/Electric%20motor%20pumpset-pamphlet.pdf
என்ற இணைய தள முகவரியினை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் விபரங்களை தெரிவித்து புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும் பொழுது அதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000 வரை, அல்லது இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டடுள்ளது.
விவசாயிகள் பம்பு செட்டுகளை வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் பெறுவது தொடர்பான முழு தகவல்களை கீழே உள்ள பிஎடிஃப் பைலை டவுன்லோடு செய்து பார்க்கலாம்…