பெங்களூரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் இருந்த ரூ. 14.75 கோடி மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 40.80 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
விஜயநகர் மாகாடி மெயின் ரோட்டில் அரிஹந்த் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் சுரேந்திர குமார் ஜெயின்.
அதேபகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சுரேந்திர குமார் தீபாவளி பண்டிகையை ஒட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் நவம்பர் 1ம் தேதி சென்றுள்ளார்.
தீபாவளி முடிந்து வீடு திரும்பிய சுரேந்திர குமார் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 18.437 கிலோ தங்கம் மற்றும் தங்கநகை மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், தனது வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நேபாளைச் சேர்ந்த நம்ராஜ் என்பவரையும் காணாததைக் கண்டு திடுக்கிட்டார்.
நேபாளைச் சேர்ந்த நம்ராஜின் குடும்பத்தினர் நேபாளில் வசிக்கும் நிலையில் நம்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக சுரேந்திர குமார் ஜெயின் வீட்டில் காவலாளி மற்றும் தோட்ட வேலை செய்து வந்துள்ளார்.
வீட்டில் நகை பணம் எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நோட்டமிட்டு வந்த நம்ராஜ், சுரேந்திர குமார் குடும்பத்துடன் ஊருக்கு சென்ற சமயம் பார்த்து தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அதை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் சுரேந்திர குமார் குடும்பத்திற்கு சொந்தமான 2.835 கிலோ தங்கம் தவிர அவரது சகோதரிக்கு சொந்தமான 2.790 கிலோ தங்கம் மற்றும் 700 கிராம் தங்க பிஸ்கெட் 212 கிராம் வைர நகைகள், கடையில் இருந்து எடுத்துவரப்பட்டு 3 கிலோ தங்கம், தவிர, அவரிடம் அடகு வைக்கப்பட்ட 8.900 கிலோ தங்கம் என மொத்தம் 18.437 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்த சுரேந்திரகுமார் ஜெயின் 18.437 கிலோ தங்கம் தவிர ரூ. 40.80 லட்சம் ரொக்கமும் களவுபோனதாக புகார் அளித்துள்ளார்.
கொள்ளை கும்பல் நேபாளுக்கு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதை அடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் நேபாள் விரைந்துள்ளனர்.