சென்னை:
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ரூ.1000 நிவாரணம் உதவியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேரிடர் மேலான்மைச் சட்டம் 2005ன் கீழ் 19ந்தேதி அதிகாலை 00 மணி முதல் 30/06/20 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,
திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட மாங்காடு மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியும், அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்க 15.6.2020 அன்று நான் உத்தரவிட்டிருந்தேன்.
அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 22.6.2020 முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவிற்கு, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.