டெல்லி: தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை அழகுப் படுத்துதல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் புதிய ரயில்பாதை தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் நவீனப்படுத்துவது போன்றவற்றை வழக்கமான பணிகளாக ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றும், ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங் கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி, “ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின்” கீழ் நாடு முழுவதும் 1,253 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதில் 1,212 ரயில் நிலைய பணிகள் திட்டமிட்டபடி முடிவடைந்து விட்டதாகவும்,  மீதமுள்ள 41 ரயில் நிலையங்களில் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதுபோல,  நடப்பாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள 8 புதிய  ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவ தாக அறிவிக்கப்பட்டது. அதில்,  தெற்கு ரயில்வேக்காக ரூ. 7,114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 7,114 கோடியில்,  அகல பாதை திட்டங்களுக்காக ரூ.346.80 கோடி, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ரூ. 464 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு ரூ. 381.51 கோடி , தண்டவாளங்களை புதுபிக்க ரூ. 1,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில்  தென்னிந்தியாவின் 11 புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில்  திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை (70 கி.மீ), திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ), அத்திப்பட்டு-புத்தூர் 88.30 (கி.மீ), ஈரோடு-பழனி (91.05 கி.மீ), சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் (179.28 கி.மீ), மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி (143.5 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ) என மொத்தம் 10 புதிய வழிதடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11வது திட்டமாக ராமேஷ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்த ராமேஷ்வரம் – தனுஷ்கோடி திட்டத்திற்கு மட்டும் ரூ. 59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, மேற்குறிப்பிட்ட 10 புதிய ரயில் பாதை திட்டத்திற்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது நடப்பாண்டு பட்ஜெட்டின் சிறப்பம்சம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதர்ஷ் நிலையத் திட்டத்தின்” கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணம், அரியலூர், ஆவடி, சென்னை கடற்கரை,சேத்துப்பட்டு,சேனை பார்க், குரோம்பேட்டை, கோயம் புத்தூர், ஓசூர், கடையநல்லூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காட்பாடி, கொருக்குப்பேட்டை, கூடல்நகர், கும்பகோணம், மணவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர், பாம்பன், பீளமேடு, பெரம்பூர் கேர்ஜ் ஒர்க்,புதுக்கோட்டை,ராஜபாளையம்,ராயபுரம்,சேலம், சங்கரன்கோவில், செஞ்சிப்பானபக்கம் ( ஹால்ட் ) , ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், புனித தோமையார் மலை, தாம்பரம், தேனி, தென்காசி, திருப்பரங்குன்றம், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, திருமங்கலம், திருநின்றவூர், திருவாலங்காடு, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் கண்டோண்மண்ட், விருத்தாசலம் உள்ளிட்ட 46 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பணிகள் குறித்த நேரத்தில் நிறைவடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.