மதுரை:

துரை அருகே ரூ.10  லட்சம் மதிப்புள்ள ஏராளமான பெட்டிகளில் வந்த ஒரு லாரி குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி, லாரியோடு முக்கி வைத்துள்ளனர்.

இந்த குக்கர்கள் சம்பந்தமாக சரியான ஆவணங்கள் கொடுக்கப்படாததால், குக்கர்கள் அனைத்தும் டிடிவி கட்சியினர் மக்களுக்கு கொடுக்க எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் டிடிவி தினகரன் கட்சி, ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் குக்கர் சின்னம் ஒதுக்க வலியுறுத்தி  நீதிமன்றங்களின் கதவுகளை தட்டியும், தேர்தல்ஆணையத்தை  நாடியும் குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இந்நிலையில், மதுரை அருகே ரூ109 லட்சம் மதிப்புள்ள குக்கர்கள் எடுத்து வந்த ஒரு லாரியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை அருகே காரைக்கிணறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வாகன சோதனையின்போது அந்த லாரி சிக்கியது.

லாரியை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள் அதனுள் குக்கர்கள் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதற்கான ஆவனங்கள் குறித்து லாரியில் வந்தவர்களிடம் கேட்டபோது, இந்த பெட்டிகளை மதுரையில் உள்ள சில திருமண மண்டபங்கள் மற்றும் சில கல்வி நிலையங்களில் இறக்கி வைக்க கூறியுள்ளதாக தெரிவித்தவர்கள், அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த லாரியை  பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அதை  மதுரை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் திருமண மண்டபங்களுக்கு குக்கர்களை கொண்டு செல்வதால் வாக்காளர்களுக்கு அளிக்க குக்கர்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் தங்களது அணிக்கு குக்கர் சின்னம் கிடைத்துவிடும் என்ற நோக்கில் ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குகளை பெறும் நோக்கில் குக்கர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிக்கியிருக்கும் குக்கர்களும் மதுரை வாக்காளர்களுக்கு கொடுக்கவே டிடிவி கட்சியினருக்கு வந்தது என்று அந்த பகுதி பொதுமக்களும், எதிர்க் கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.