மதுரை: கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து உயர்நீதி மன்றம் நீதிபதி 100 நாள் வேலை திட்டமும் மக்களை சேம்பேறிகளாக்கி வருகிறது என கடுமையாக சாடி உள்ளது.
தமிழ்நாடு அரசு எதிர்பாராத விபத்து மற்றும் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிக பட்சமாக 3 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திமுக அரசை கடுமையாக கலாய்த்து மீம்ஸ்களும் உலா வருகின்றன. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை குடிகாரர்களை ஊக்குவிப்பது போல இருப்பதாகவும், இதுவரை நடைபெற்ற கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் திமுகவினர் சம்பதப்பட்டு உள்ளதால், கட்சிகாரர்களுக்கான இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம். 100 நாள் வேலை உறுதித் திட்டம் இளைஞர்களை சோம்பேறிகளாக ஆக்குகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் ‘கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் முல்லை பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் அ.வெண்ணிலாவின், ‘நீரதிகாரம்- சில பார்வைகள்,சில பகிர்வுகள்’ நிகழ்வு நடைபெற் றது. இதில் உயர் நீதிமன்ற நிர்வாகநீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை உறுதித் திட்டம் தேவையற்றது. இந்த திட்டத்தின் பெயரில் ‘பாதி சம்பளம் எனக்கு கொடுத்துவிடு, மீதி சம்பளம் நீ எடுத்துக்கொள்’ என்று சொல்லி கிராம இளைஞர்கள் முதல் பெரியோர்களை வரை அனைவரும் சோம்பேறிகளாக ஆக்கப்படுகின்றனர். பாதி சம்பளம் வாங்கும் இளைஞர்கள் அதைக்கொண்டு மதுபானக் கடைக்குத்தான் செல்கின்றனர்.
ரூ.200 சம்பளம் கிடைத்தால் மதுவுக்கு ரூ.150 செலவு செய்ய முடியாது, இதனால் மலிவு விலைக்கு ஏதாவது கிடைக்குமா என தேடுகின்றனர். அப்படி மலிவு விலையை தேடிப்போன ஒரு கூட்டம்தான் கள்ளக்குறிச்சியில் மாண்டுபோய் இருக்கிறது. கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது எவ்வளவு பெரிய தீய முன்னுதாரணம் என்பதை அரசு உணர வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்.
பள்ளியில், கல்லூரியில் சேரும் காலத்தில், படிக்கும் காலத்தில் இளைஞர்கள் தொடர்ந்து நல்வழிப்படுத்தப்பட வேண்டும் என்றவர், இன்றைக்கு இருக்கும் வசதி, வாய்ப்புகளை நம் முன்னோர்கள் எப்படி பெற்று தந்தனர் என்ற வரலாற்றை இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த வரலாற்றை சொல்லும் தார்மீக கடமை எழுத்தாளர்களுக்கும் உண்டு.
சமூகத்தை நல்வழிப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் பணியை இலக்கியப் படைப்புகள் செய்கின்றன. பாரம்பரியம், வரலாற்றை மறக்காமல் இளைஞர்களை ஒருமுகப் படுத்தி அழைத்துச் சென்றால் உலகம் முழுவதும் உள்ள எல்லா சமூகங்களையும் விட தமிழ் சமூகம் முன்னேறிய நாகரிக சமூகமாக மாறும்.
இவ்வாறு பேசினார்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த விமர்சனம் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.