.
சாஹேத்ரி, அரியானா
அரியானா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவிலில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சாஹேத்ரியில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு இந்த கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது அலங்காரம் செய்வதற்காக ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வங்கியின் லாக்கரில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் இரவு இந்த கோயிலுக்குள் சில கொள்ளையர்கள் புகுந்து இந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சி கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. கோவில் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒரு புகாரை அந்த பதிவுடன் அளித்துள்ளனர். அதை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
”திருவிழாவை ஒட்டி இந்தக் கோவிலுக்கு உண்டியல் வருமானமாக லட்சக்கணக்கான ரூபாய்கள் வந்துள்ளது. கோவிலில் அதை வைக்க இடம் இல்லாததால் நாங்கள் அதை வங்கியில் டிபாசிட் செய்தோம். அதனால் அந்தப் பணம் தப்பியது” என கோவில் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.