சென்னை : ரூட்டு தல பிரச்சினை தற்போது கொலை சம்பவமாக மாறி உள்ளது, கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்  தொடர்பான  வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில்  கல்லூரி மாணவர்களிடையே கடந்த 10 ஆண்டுகளில்  நடைபெற்ற மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் , அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் என்ன என்பது  குறித்த விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 4ந்தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லுரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில்,  மாநிலக்கல்லூரி  மாணவர் சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார். இதில் பலத்த  காயமடைந்த சுந்தர், சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி, அக்.6-ல் மரணம் அடைந்தார்.

இதையடுத்து,  இந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனவர்.

இதைத்தொடர்ந்து,  கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு,  மாணவர்களின் பெற்றோர்கள் ஆஜராகி இருந்தனர்.

வழக்கின் விசாரணையின்போது,  காவல்துறை தரப்பில், கைதான மாணவர்கள் ஒரு பருவத்திற்கு 10க்கும் குறைவான நாட்களே கல்லூரிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைடுத்து மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  அவர்களுக்கு  ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த   நீதிபதி, “கொலையாளி குறித்து கவலைப்படுவோர், கொலையான மாணவர் குடும்பம் பற்றி ஏன் கவலைப்படவில்லை?  என மாணவர்களின் பெற்றோரை பார்த்து கேள்வி எழுப்பியதுடன்,  மாணவர்களின் கல்லூரி வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது, சம்பந்தப்பட்ட மாணவர்கள்,  பொறுப்பான மாணவர்களாக தெரிய வில்லை என கூறினார்.

மேலும், சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி இதுபோன்ற மோதல்கள் நடைபெற்று வருவதாக கூறியதுடன்,   கடந்த ஆண்டுகளாக  வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை  தடுக்க நிச்சயம் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியதுடன்,

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் என்ன? காவல்துறை, ரயில்வே போலீஸ் பதிவு செய்த வழக்குகள், அவற்றின் நிலை,  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, எத்தனை வழக்குகள் சமரசமானவை  என்பது  பற்றிய விவரம் தர ஆணையிட்டு வழக்கை அடுத்த வாரத்துக்கு  ஒத்தி வைத்தது.