டெல்லி

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

 

கடந்த சில நாள்களாக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள மொத்தவிலை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வணிகத்திலும், ஆன்லைனிலும் தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்துள்ளது. காய்கறிகள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொடர் மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் வாகனங்களால் காய்கறிகளை கொண்டுவர முடியவில்லை எனவும் இதன் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.