ஐதராபாத்:
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா தலித் சமூகத்தவர் அல்ல, அவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நீதிபதி ரூபன்வால் கமிஷனின் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் ரோகித் வெமுலா தனது விடுதியில் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு அரசியல் நெருக்கடியே காரணம் என்று அவரது சக மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரூபன்வால் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப் பட்டிருந்தது.
இக்குழு சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ரோகித்தின் ஜாதி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. வெமுலாவின் பரிதாப மரணத்துக்கான காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு அவர் தலித்தா இல்லையா என்ற ஆராய்ச்சியில் விசாரணைக் கமிஷன் ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள சான்றே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்,
இதற்கிடையே, ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் தலித் மாணவர் அமைப்பினரும் ரூபன்வால் கவிஷனின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வெமுலாவை தற்கொலைக்கு தூண்டியது பா.ஜ.க தலைவர்கள்தான் என்று குற்றச்சாட்டுகள் இருந்துவரும் வேளையில். பா.ஜ.க வின் அழுத்தத்தின் பேரில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிதி இராணி மற்றும் பண்டாரு தாத்ரேயா ஆகியோரை காப்பாற்றும் முயற்சியிலேயே கமிஷன் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.