டெல்லி:

லக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அனைவரும் ஒன்றிணைந்தும், விழிப்புணர்வுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவுரை கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் இதுவரை இந்தியா உள்பட  120-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்கொண்டுள்ளது. லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 5,500ஐ தாண்டி உள்ளது.

இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், விழிப்பு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில்,   தொற்றுநோய் காரணமாக   கடந்த சில வாரங்கள் நம் அனைவருக்கும் கடினமான காலங்களாக உள்ளது. உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதை பார்த்தால் வருத்தமாக உள்ளது.

நாம் அனைவரும் ஒன்றிணைவதே உலகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரே வழி என குறிப்பிட்டுள்ளார் ரோஹித். கொஞ்சம் புத்திசாலியாக இருப்பதன் மூலம் நாம் இதை செய்யலாம்.

நமக்கோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ ஏதேனும் அறிகுறி தெரிந்தால் உடனே உங்கள் அருகிலுள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏனென்றால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம், நாங்கள் மால்களுக்குச் செல்ல விரும்புகிறோம், நாங்கள் அனைவரும் திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறோம்.

கொரோனா வைரஸுடன் நேர்மறை சோதனை செய்தவர்களை கவனித்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கையையும் ஆபத்தில் ஆழ்த்தி கொண்டு பணிபுரியும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு கூறி உள்ளார்.

அதுபோல, தமிழக வீரரான அஷ்வின் தனது டிவிட்டர் பதிவில்,  கொரோனா பரவுவதை தடுக்க ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதனை சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. வெயில் கொளுத்துகிறது என்பதால் கொரோனா பரவாது அல்லது கொரோனா பாதிப்பே ஏற்படாது என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.