டில்லி,

ரோஹிங்கியா முஸ்லீம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற இடைக்கால சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினை காரணமாக அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள், அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்தியாவிலும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சுமார் 40ஆயிரம் பேர் தஞ்சமடைந்து உள்ளனர். இவர்களை இங்கிருந்து வெளியேற்ற இந்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்பட்டது.

இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா இன முஸ்லீம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி மத்திய அரசு அவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக, தாங்கள் எங்கள் சொந்த நாட்டுக்கு செல்லமாட்டோம், வற்புறுத்தி அனுப்பினால் தற்கொலை செய்துகொள்வோம்  என்றும் இங்கு தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அகதிகளின் மனித உரிமை சார்ந்த நலனுக்கும் அளிக்க வேண்டும் என்றும்,  மத்திய அரசு ரோஹிங்கியா இன அகதிகளை வெளியேற்ற முயற்சிக்க கூடாது என்றும், வழக்கின் அடுத்த விசாரணை  நவம்பர் 21ம் தேதிக்கு  ஒத்தி வைப்பதாகவும் அதுவரை அவர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதிப்பதாகவும்  நீதிபதிகள் கூறி உள்ளனர்.