டில்லி:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான  ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது முன்ஜாமினில் உள்ள வதேராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வதேரா தரப்பு வழக்கறிஞர், தனது அமலாக்கத்துறை கேட்ட கேள்வி களுக்கு பதிலளித்ததாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு “ஒப்புதல் அளிக்காதது” அவர் ஒத்துழைக்கவில்லை என்று அர்த்தமல்ல என்றும் கூறினார்.

இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை   நவம்பர் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.