பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா  கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள்  பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக  நடத்திய ரோடு ஷோ அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆவேசகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது மக்களிடையே கோபத்தை தூண்டி உள்ளது.

இந்த கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முக்கிய குற்றவாளிகளுக்கு சமீபத்தில்  கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை (ஜாமின்) வழங்கிய நிலையில் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அலப்பறையில் ஈடுபட்டுக்கொண்டு, தங்களது பிணை ஏதோ வெற்றி விழா கொண்டாட்டம் போல கையை ஆட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் ரோடு ஷோ  நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் இளம்பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் நாடு முழுவதும் பேசும்பொருளாக மாறியது. அதாவது,  சிறுபான்மை இனத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், மாற்று சமூகத்தை சேர்ந்த, 40 வயது நபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில்,  இருவரும், கடந்த ஆண்டு (2024)  ஜனவரி 8ஆம் தேதியன்று ஹனகல் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து  தங்கியிருந்தனர்.

இதை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல்,  ஹோட்டலில் தங்கியிருந்த அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று, அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடூர செயலில் 7 பேர் ஈடுபட்டதாக கூறப்பட்டது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக காவல்துறையினர்,  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பாதிக்கபட்ட இளம் பெண் நீதிபதி முன்பு பகீர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த காவல்துறையை கடுமையாக சாடிய நீதிபதி, வழக்கை முறையாக விசாரிக்க உத்தர விட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த பாலியல் வழக்கில், தொடர்புடைய 7 முக்கிய பேருடன் சேர்த்து, குற்றவாளிகளுக்கு உதவியதாக 12 பேர் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்  12 பேருக்கு ஏற்கனவே  பினை கிடைத்து வெளியே வந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது.

இதனிடையே குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளும் காணுவதில் ஏற்பட்ட சிக்கலால், ஹாவேரி செசன்ஸ் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு அண்மையில் பிணை கொடுத்தது.  அதன்படி, முக்கிய பாலியல் குற்றவாளிகளான,   அஃப்தாப் சந்தனகட்டி, மதார் சாப் மண்டக்கி, சாமிவுல்லா லலனாவர், முகமது சாதிக் அகாசிமானி, ஷோயிப் முல்லா, தௌசிப் சோட்டி, மற்றும் ரியாஸ் சாவிகேரி ஆகிய 7 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

இவர்கள்  பொதுவெளியில், தங்களது ஜாமினை கொண்டாடினர். . ஹாவேரியின் அக்கி ஆலூர் நகர சாலைகளில் மகிழ்ச்சி பொங்க இவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் புடை சூழ ஊர்வலம் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.