கோவை,

ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு எதிராக, வார இதழ் ஒன்றில், நடிகர் கமலஹாசன்  “திருடனிடம் பிச்சை எடுத்த ஆர்.கே.நகர்  மக்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு  கிளம்பியது. இந்நிலையில், திருடனிடம் பிச்சை எடுத்த ஆர்.கே.நகர் மக்கள் என அந்த தொகுதி மக்களை  இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிய கோரி இளங்கோவன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான  அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிராக களமிறங்கிய டிடிவி தினகரன் அமோகமாக வெற்றி பெற்றார்.

அவரது வெற்றி குறித்து கருத்து கூறிய கட்சிகள், ஆர்.கே.நகரில்  பணநாயகம் வென்றதாக குற்றம் சாட்டியிருந்தன.

அதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆளும் கட்சி தரப்பில் வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது. முதல்வர் ஆரம்பித்து அமைச்சர் வரை ஒவ்வொருவரும் கச்சிதமாக பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது. சுயமாக வளர்ந்த சுயேட்சை ரூ.20,000 தந்து ஒவ்வொரு ஓட்டுக்கும் விலை நிர்ணயித்தார். அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை அழுத்திவிட்டார்கள் வாக்காளர்கள்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் கமல்.

மேலும், ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோய்விட்டனர். 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனது பிச்சை எடுப்பது போன்றது. திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா?” என்று எழுதியுள்ளார்.

கமலின் பிச்சை பேச்சுக்கு  அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கமலுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார்.