அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பன்ட் சதமடிக்க, சுந்தர் அரைசதம் அடிக்க, இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.
இந்திய அணி 153 ரன்களை எடுத்த நிலையிலேயே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இங்கிலாந்தைவிட 52 ரன்கள் பின்தங்கிய நிலையிலிருந்த இந்தியா, 205 ரன்களைத் தொடுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், ரிஷப் பன்ட்டும் வாஷிங்டன் சுந்தரும் ஆட்டத்தை தம் கைகளில் எடுத்துக்கொண்டனர். இந்த ஜோடியை, இங்கிலாந்து பவுலர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. மொத்தம் 118 பந்துகளை மட்டுமே சந்தித்த ரிஷப் பன்ட், 2 சிக்ஸர்கள் & 13 பவுண்டரிகளுடன் 101 ரன்களை விளாசினார். பின்னர், ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார்.
அதேபோன்று, அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்தார். அவர் இன்னும் நாட் அவுட்டாக உள்ளார்.
இதனால், தற்போதைய நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 294 ரன்களைச் சேர்த்து, இங்கிலாந்தைவிட 89 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை இன்னும் 20 அல்லது 30 ரன்கள் சேர்க்கும்பட்சத்தில், இங்கிலாந்திற்கு பெரிய நெருக்கடியை கொடுக்கலாம்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் & ஜேக் லீச் தலா 2 விக்கெட்டுகளையும் இதுவரை கைப்பற்றியுள்ளனர்.