ரியோ:
ரியோடிஜெனிரோவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்.
1
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில்  சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு முதலாவது தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.
2
இன்று ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தங்கப்பதக்கம் வென்றார்.
எப்ஃ46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.  இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 2-வது தங்கத்தை தட்டிச் சென்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவேந்திர ஜஜாரியா. இவரது எட்டாவது வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் அவரது இடதுகை செயல் இழந்தது.
5
2004 பாரா ஒலிம்பிக்கில் 62.15மீ., தூரம் எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ரியோவில் நடைபெற்ற தற்போதைய பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் வீசி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
2004ம் ஆண்டு இதே பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்றதை அடுத்து அவருக்கு அர்ஜூனா மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தது மத்திய அரசு..