துபாய்:

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஈரான் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 ஆண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்தி வரும் மோதலில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலம் வீழ்த்தும் செயலில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஹவுத்தி படைகளுக்கு எதிராக ஏமன் நாட்டு தலைநகரான சனா நகரில் தற்போது உச்சகட்டப் போர் நடக்கிறது. இந்நிலையில், அபுதாபி நாட்டின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும் பராக்கா அணு மின்சார நிலையத்தை நோக்கி இன்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி நாட்டின் மேற்கில் உள்ள பாலைவனப் பகுதியில் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டு வரும் அணு மின்நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள ஹவுத்தி போராளிகளின் அறிக்கைக்கு அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.