திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமுக வலைதளங்களில் லீக்கானது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  10ம் வகுப்பு அறிவியல் மற்றும் 12ம் வகுப்பு கணிதம் பாடத்தின் கேள்வித்தாள் சமூக வலைதளங்களை வெளியானது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில்,   உரிய விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், பிப்ரவரி 1ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் போதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான அச்சத்தை போக்கும் வகையில், திருப்புதல் தேர்வு பிப்ரவரி 14ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதுடன், நேரடி தேர்வாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  அதன்படி இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, திருப்புதல் தேர்வுக்குறிய கேள்வித்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தது. இந்த  நிலையில் இன்று நடைபெற விருந்த 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 12ம் வகுப்பு கணிதத்தேர்வு, மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாட  வினாத்தாள்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் டெலிகிராம் மற்றும் டிவிட்டர் போன்றவற்றில் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தக்கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் மாவட்ட காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மூலமாக பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்  நிலையில், எப்படி சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து,  திருவண்ணாமலை  உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்  கேள்வித்தாள்களின் பாதுகாப்பு குறித்து துறை ரீதியாக உரிய விசாரணை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.