சென்னை: தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும்,    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம்  அறிவித்து உள்ளது.

தங்களது கோரிக்கைகளை  விரைந்து நிறைவேற்ற அரசிற்கு  அவகாசம் வழங்கப்படுவதாகவும்,  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் முழுவதும் வலிமையான போராட்டங்கள் நடத்தப்படும் என வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.25-ம் தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்திருந்தது.

இதற்கிடையில் வருவாய்த்துறை ஊழியர்களும்,  அதிக பணி சுமை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம்  மார்ச்22   அன்று நடைபெற்றது.  இதில், மாநிலத்தலைவர் முருகையன் மற்றும் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  அப்போது, ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து,  செயற்குழுவில் கலந்து கொண்ட 38 மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக் களின் அடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “வருவாய்த்துறை அலுவலர்களின் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற, புதியதாக பொறுப்பேற்றுள்ள வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி மாலை மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் விவரம்:

  1. வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட, முதலமைச்சர் உத்தரவிட்ட பிறகும் இரண்டு ஆண்டுகளாக தாமதம் செய்வதை விடுத்து உடன் ஆணைகள் வழங்க வேண்டும்.
  2. அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் வழங்கிட வேண்டும்.
  3. வருவாய்த்துறையில் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கான சான்றிதழ்களை விரைந்து வழங்கிட, அனைத்து வட்ட மற்றும் கோட்ட அலுவலகங்களில் கூடுதலாக துணை வட்டாட்சியர் (சான்றிதழ்) பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
  4. தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 20 துணை ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணியிடங்களை, கலைக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உடன் நிரப்பிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  5. வருவாய்த்துறையில் ePMS (Electronic Promotion Management System) மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் செயற்கையான பணி அழுத்தத்தை உயர் அலுவலர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனைத் தவிர்த்து ஒவ்வொரு திட்டத்திற்கும் போதிய கால அவகாசம் வழங்கி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
  6. வேளாண்மைத்துறை சார்ந்த, Agri Stake பணிகளை மேற்கொள்ள உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு போதிய கால அவகாசமும், இதில் உள்ள சிரமங்களை களைந்திட தமிழக அரசு மற்றும் வேளாண்மைத் துறை ஆணையர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்ச வரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்துதல், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA) சார்பில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதலாக உறுப்பினர் சந்திப்பு, பிரச்சாரம் நடத்தப்படும். தொடர்ந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி மாவட்ட, வட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
  8. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியத்துறையான வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான நீண்ட நாள் நிலுவை கோரிக்கைகளை, பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறைவேற்றி சமூகமான சூழலை ஏற்படுத்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.