சென்னை:
நாடு முழுவதும் மே 3ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ந்தேதிக்கு பிறகு பல இடங்களில்கட்டப்பாடுகள் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்தறை விளக்கம் அளித்துள்ளது. அதில், 4 வாரங்கள் புதியதாக யாருக்கும் நோய் தொற்று இல்லை என்றால் மட்டுமே, அந்த பகுதிகளில்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இல்லையேல் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெளிவுபடுத்தி உள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில் தீவிரமாகி உள்ள கொரோனா தொற்று இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கொரோனா அதிகமுள்ள பகுதிகள், சுமாராக உள்ள பகுதிகள், கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பகுதிகள் என 3 பிரிவாக பிரிக்கப்பட்ட 3 வண்ணங்களாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகள், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருக்கும். வேறு பகுதிகளில் இருந்து வருவோர், இந்த பகுதிகளுக்குச் செல்ல முடியாது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போர், அந்த பகுதிகளில் இருந்து வெளியில் வர முடியாது. இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், போலீசார் உள்ளிட்டோர், இந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 20ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் பல பகுதிகளில் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து,  மத்திய சுகாதார சுகாதார அமைச்சக  அதிகாரிகள் கூறியிருப்பதாவது,
அடுத்த நான்கு வாரங்களில், தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து, புதிதாக யாருக்கும் வைரஸ் பரவில்லை என உறுதியாக தெரியவந்தால், அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
இந்தப் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும், அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கடைசியாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின், அடுத்த, 28 நாட்களில், புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத சூழலில், சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும். ஆனாலும், தொடர்ந்து அந்த பகுதி கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.