ஸ்ரீநகர்

சுமார் 36 நாட்களுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பல இடங்களில் நீக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கி  காஷ்மீருக்கு  அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.    அத்துடன் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசஙளாக பிரிக்கப்பட்டன.   லடாக் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.    மாநிலத்தில் கலவரம் ஏற்படலாம் என்னும் ஐயத்தின் கீழ் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

மக்கள் கூட்டத்தைத் தடுக்க பல மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.   தற்போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டு 36 நாட்கள் ஆன நிலையில் காஷ்மீரின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   தற்போது காஷ்மீரின் பல நகரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கபடுள்ளன.  பொது போக்குவரத்து தற்போது பல இடங்களில் முழு அளவில் சீரடையாததால் அரசு அலுவலகங்களில் இன்னும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

மாநிலத்தின் பல இடங்களில் லாண்ட் லைன் தொலைப்பேசிச் சேவை மீண்டும் தொடங்கி  இருந்த போதும் மொபைல் மற்றும் இணையச் சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.   அது மட்டுமின்றி அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவல் இன்னும் தொடர்ந்து வருகிறது.   ஸ்ரீநகரில் உள்ள  ஒரு சில இடங்களை விடப் பாக்கி உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளன.