டெல்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் , அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என செய்தி நிறுவனங்கள் மற்றும்  பொதுமக்களுக்கு  மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மூத்த அதிகாரிகள் தங்கள் தலைமைப் பாத்திரங்களுக்காக பொதுமக்களின் கவனத்தைப் பெற்ற ஆபரேஷன் சிந்தூர் போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், மத்தியஅரசு இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் குடும்பங்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் தனிப்பட்ட விவரங்களை பேட்டியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தேசிய நலன் கருதி முக்கியமான நேரங்களில் கட்டுப்பாட்டுடன் ஊடகங்கள் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கு இந்திய ராணுவம்  பதிலடி கொடுத்த சிந்தூர் ஆபரேஷன் குறித்து பொதுமக்கள்  தங்களது வரவேற்பை தெரிவித்து வரும் நிலையில்,  சிலர் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தையும் இகழ்வு செய்யும் வகையிலும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டுமென செய்தி நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகள் மற்றும் குடும்பத்தினரை, தனிப்பட்ட செய்திகள், பேட்டிகளுக்காக தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அல்லது தேவையில்லாத தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள், அதன் தொழில்முறை மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து செய்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம் என்றும், தனிப்பட்ட யூகங்களை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்தி நிறுவனங்களின் ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கு பாதுகாப்பு அமைச்சகம் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

அதேநேரத்தில், பொறுப்பாக நடந்து கொள்வதுடன், நாட்டிற்காக பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கண்ணியத்தை மதிக்க வேண்டும் என்றும் செய்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.