சென்னை:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள கேரள மாநிலம், இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டதைக் கூட்டி,  தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில், மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க  அனைத்துக்கட்சி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று சட்டமன்ற தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.  இதில், குடியுரிமை திருத்தம் திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில முதல்வர் பினராய் விஜயன் இன்று தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அந்த தீர்மானம் பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

கேரளாவின் தீர்மானத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர் தனது முகநூலில், கேரள சட்டமன்றப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதமிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும்  என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.

ஆகவே வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.