திருவனந்தபுரம்
மிசோரம் ஆளுநர் கும்மானம் ராஜசேகரன் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிசாரம் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 25 ஆம் தேதி அன்று கும்மானம் ராஜசேகரன் ஆளுநராக பதவி ஏற்றார். அவர் தனது ஆளுநர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அசாம் ஆளுநர் ஜகதீஷ் முகிக்கு மிசோரம் ஆளுநராக கூடுதல் பொறுப்பு அளித்துள்ளார்.
கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அந்தக் கட்சி கருதி வருகிறது. சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டங்களால் அந்த நம்பிக்கை பாஜகவினரிடையே மேலும் அதிகரித்துள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட கும்மானம் பகுதியை சேர்ந்தவர் கும்மானம் ராஜசேகரன்.
கேரள மாநில பாஜகவின் முன்னாள் தலைவரான கும்மானம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. ஆனால் அவர் மிசோரம் ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பதால் அந்த செய்தியை பலரும் நம்பாமல் இருந்தனர். தற்போது கும்மானம் ராஜசேகரனின் ராஜினாமா அந்த தகவலை உறுதிப் படுத்தி உள்ளது.
இது குறித்து கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “கும்மானம் ராஜசேகரன் திருவனந்தபுரம் வேட்பாளாராக போட்டியிட மாநில பாஜக முழு ஆதரவை அளிக்கிறது.” என தெரிவித்துள்ளார். ராஜசேகரன் தேர்தலில் போட்டியிட்டால், அவர் சி பி ஐ வேட்பாளர் திவாகரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டி வரும்.