டில்லி,
திவால் சட்டத்தை திருத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதன் காரணமாக வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள், சொத்து ஏலங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்குபவர்களில் சிலர் பணத்தை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி விடுகின்றனர். ஒருசிலர் வெளிநாடுகளுக்கு தப்பி விடுகின்றனர்.
இதுபோன்று கடனை திருப்பி செலுத்தாமல் செல்பவர்களின் வங்கி கணக்குகள் என்.பி.ஏ., (செயல்பாடு இல்லாத சொத்துகள்) என கூறப்படும். அதுபோல பல நிறுவனங்களும் இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு தில்லுமுல்லு செய்பவர்களின் வாராக்கடனுக்காக, அவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு, திவால் சட்டத்தின் கீழ் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம். அந்த ஏலத்தின் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களே பினாமி பெயரில் குறைந்த விலைக்கு மீண்டும் அந்த சொத்துக்களை கைப்பற்றி விடுகின்றனர்.
இதை தடுக்கும் பொருட்டு, ஏலத்தில் யார் யாரெல்லாம் பங்குபெற முடியும் என தற்போது விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜப்தி செய்யப்பட்டவர்களின் சொத்துகள்மீது நடைபெறும் ஏலத்தின்போது, பிரச்சினைக்குரிய நபர்களோ, அவர்களின் நிறுவனமோ, சார்பு நிறுவனமோ ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான சட்ட திருத்தம் செய்யப்பட்டு, மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனது ஒப்புதலை வழங்கினார்.
இதன் காரணமாக முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள், நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.