டெல்லி: ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என்றும், இதுவரை 98.04 சதவீதம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது  என இந்திய  ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம்  இந்திய அரசு,  புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. அப்போது பொருளாதாரத்தில் பணத் தேவையினை பூர்த்தி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 24(1)-ன் கீழ் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  பின்னர், கடந்த ஆண்டு (2023) ல், மற்ற  ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பதால் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளது. அதனால், 2018 – 19 ஆண்டில் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது என்று ஆர்பிஐ தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து,  கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ம் தேதி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாகவும் இனி அவை செல்லாது, பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான நீண்ட கால அவகாசமும் வழங்கப்பட்டது.   அப்போது, மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஏராளமானோர், தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.  கடந்த 2023, மே 19 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் வசதி அமலில் உள்ளது. அக்டோபர் 9 முதல், தனிநபர்களோ, நிறுவனங்களோ அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அதிகாரிகள் அனுமதித்து வந்தனர். இதற்கான அனுமதி வழங்கி ஓராண்டை கடந்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் சுமார் 7ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2000நோட்டுக்கள் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அதாவது,   2024, அக்.31-ம் தேதி நிலவரப்ப  படி, ரூ.6,970 கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023, மே 19-ம் தேதி புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகளில் 98.04 சதவீதம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.