டில்லி

நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறை பதவியான ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பதவிக்கு மத்திய அரசு கடந்த மூன்று மாதங்களாக நியமனம் செய்யாமல் உள்ளது.

 

தற்போது உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.  இதனால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.    இந்த நேரத்தில் பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை ஆகும்.   இந்த சீர்திருத்தங்களை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர் செய்வது வழக்கமாகும்.

ரிசர்வ் வங்கிக்கு நான்கு துணை ஆளுநர்கள் உண்டு.  இவர்களில் இருவர் ரிசர்வ் வங்கியில்  இருந்து பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படுவார்கள்.    மற்ற இருவரில் ஒருவர் வங்கியாளராகவும் மற்றவர் பொருளாதார நிபுணராகவும் இருப்பார்கள்.  இந்த பொருளாதார துணை ஆளுநர் பல கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பார்.

இந்த பதவியில்  இருந்த உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநரான பிறகு விரல் ஆசார்யா துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.   சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு விரல் ஆசார்யா தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவருடைய பதவிக்கு வேறு யாரையும் மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை.

இது குறித்து ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி அரசு விளம்பரம் அளித்திருந்தது.  இதற்குப் பலர் விண்ணப்பித்த போதும் அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது.   தற்போதுள்ள பொருளாதார சிக்கலில் சரியான முடிவு எடுக்கப் பொருளாதார துணை ஆளுநர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசார்யாவின் பதவி விலகலுக்குப் பிறகு துணை ஆளுநர் இல்லாமலே ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் ரெபோ வட்டிக் குறைப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.    அடுத்த கூட்டம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.  ஆயினும் இதுவரை இந்த பதவி காலியாகவே உள்ளது.

இது குறித்து பொருளாதார ஆர்வலர் ஒருவர், “இது போல ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  பதவி காலியாக இருப்பது தற்போது வழக்கமாகி உள்ளது.  பாஜக ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டபோது இந்த பதவி 4 மாதங்கள் காலியாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.