அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை ஒரே நேரத்தில் அறிவித்து அமெரிக்க மக்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.
கல்வி உதவித் தொகை நிறுத்தம், பணி நீக்கம், வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவர்களை நாடு கடத்தியது, உலக வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத நாட்டைக் கூட விட்டுவைக்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு என பல்வேறு அதிரடிகள் தொடர்கதையாகி உள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடிகளால் அரண்டு போயிருக்கும் அமெரிக்க மக்கள் விலைவாசி உயர்வு குறித்து கவலைகொண்டுள்ள நிலையில், அமெரிக்க பல்கலைக்கழங்கங்களில் ஆய்வுகளுக்காக வழங்கப்பட்டு வந்த நிதி சலுகைகள் நிறுத்தப்பட்டது குறித்து ஆராய்ச்சியாளர்களும் கவலையடைந்துள்ளனர்.
அதேவேளையில், டொனால்ட் டிரம்ப் முதல்முறை அதிபராக பதவிவகித்த போது வாழ தகுதியற்ற நகரம் என்று ஏளனம் செய்த பெல்ஜியம் நாட்டின் ப்ரசல்ஸ் நகரில் உள்ள பல்கலைக்கழங்கம் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் தர முன்வந்துள்ளது.
இந்த பல்கலைக்கழங்களில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளில் பெரும்பாலும் அமெரிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் நிலையில், இந்த இடங்களுக்காக தினமும் 10 முதல் 15 விண்ணப்பங்கள் வந்து குவிவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைவது அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உணர்த்துவதாக அமெரிக்க சிந்தனையாளர்கள் கூறிவருவதுடன் அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தவிர, உலக நாடுகள் மீது அமெரிக்க வரி விதிப்புக்கான சூத்திரதாரி யார் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.