ஸ்ரீஹரிகோட்டா:

லகமே எதிர்பார்த்திருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் சமயத்தில் திடீரென சிக்னல் பாதிக்கப்பட்ட நிலையில், லேண்டரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில்,  சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் நிலவில் வேறு சில ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

கடந்த ஜூலை 2ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ ஏவியது. இந்த விண்கலமானது, முதன்முறையாக நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சென்றது.  திட்ட மிட்டப்படி கடந்த 2 மாதமாக இந்த விண்கலம் பூமியை சுற்றி வந்த நிலையில்,ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர்நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான்-2 விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 2ந்தேதி தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் தனியாக  பிரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து லேண்டர் விக்ரம நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தொடங்கின. அதன்படி, நள்ளிரவு 1.30 மணி அளவில் தரையிறங்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி சில நிமிடங்களில், லேண்டரில் இருந்து வரும் சிக்னல் தடை பட்டது. இதன் காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர். பின்னர், இதை இஸ்ரோ தலைவர்  சிவன் உறுதி செய்த நிலையில்,  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர் இன்னும் சரியான முறையில் செயல் பட்டு வருகிறது என்று அறிவித்துள்ள இஸ்ரோ, இந்த ஆர்பிட்டரை வைத்து நிலவில் 95% சதவிகிதம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்,  நிலவிலுள்ள சூழல்கள் குறித்து  ஆர்பிட்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் -2 விண்கலத்தின் ஒரு பகுதியான லேண்டரை தரையிறக்கும் பணி மட்டுமே தற்போது தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்திய விண்வெளி நிறுவனத்தின் வியத்தகு சாதனையான சந்திரயான்-2 விண்கலத்தின் ஒரு பகுதி மட்டுமே செயல்படுவது தடைபட்டுள்ள நிலையில், மற்ற ஆய்வுப்பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும். எனவே, சந்திரயான்-2 விண்கல திட்ட தோல்வி அடையவில்லை. சந்திரயான் வெற்றிக்காக ஒவ்வொரு இந்தியனும் மார்தட்டிக் கொள்ளலாம்.