நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (RSF) என்ற உலகளாவிய ஜர்னலிசம் கண்காணிப்பு அமைப்பும், இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமை நிறுவனமான குர்னிகா 37 சேம்பர்ஸ், ஆகிய இரண்டு அமைப்புகளும் கூட்டாக இந்த கோரிக்கையை வைத்துள்ளது.
நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராக செய்தி வெளியிடுவதாக 2023 ஆகஸ்ட் மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து வேறு எந்தவொரு ஆதாரமும் இன்றி நியூஸ்க்ளிக் செய்தி நிறுவன நிறுவனர் மற்றும் நிர்வாகிகளை 2023 அக்டோபர் மாதம் கைது செய்த டெல்லி போலீசார் இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் 88 இடங்களில் சோதனை நடத்தியது மற்றும் செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய 80 ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்களிடமிருந்து சுமார் 300 எலக்ட்ரானிக் கேஜெட்களை கைப்பற்றியது.
இந்த விவகாரத்தில் நியூஸ்கிளிக் செய்தி நிறுவன நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு முரணனானது என்று இந்த ஆண்டு மே 15 ம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 உயர் அதிகாரிகள் மீது உலகளாவிய மேக்னிட்ஸ்கி சட்டத்தின் கீழ் (Global Magnitsky Act) அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று RSF மற்றும் Guernica 37 Chambers ஆகிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் டெல்லி காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை செய்தியாளர்கள் மீதான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மனித உரிமைகளை மீறும் வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும் அவர்களின் பயணத் தடைகளை விதிக்கவும் அமெரிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கி 2016ல் கொண்டுவரப்பட்ட Magnitsky சட்டப்படி டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.