ராமநாதபுரம்: தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது, அதற்காக, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரக்கக்கோரி மத்தியஅரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், போதுமான அளவு தடுப்பூசி கிடைக்காததால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலை உள்ளது.
இநத் நிலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், கட்டுமானம் மற்றும் ஆக்சிஜன் கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழ்நாட்டில் விரைவில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, வயதான நோயாளிகளுக்கு தேவையா மருந்துகள் வீடு தேடி வந்து கொடுக்கப்படும் என்றவர், டயாலிசிஸ் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை போன்றவற்றையும் வீடு தேடி வந்து சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், தொற்று பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர், தமிழகத்தில் எழுந்துள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இதனால், தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.