புதுடெல்லி: பாட்டிலில் அடைக்கப்பட்ட ஆல்கஹால் அல்லாத, கார்பன் ஏற்றப்பட்ட பானங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பானங்கள் சங்கம்(ஐபிஏ), இக்கடிதத்தை நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ளது. இச்சங்கத்தில் பெப்ஸி இந்தியா மற்றும் கோககோலா இந்தியா ஆகிய நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை சேர்க்கப்பட்ட இதர உணவு மற்றும் பானங்களுக்கு, ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகையில், எதற்காக கோலா போன்ற பானங்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், குளிர்பான தொழில்துறை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இப்பானங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியானது, ரூ.70000 கோடி மதிப்புள்ள தொழில்துறையை பாதிக்கும்.
தற்போதைய மோசமான சூழலால், இத்துறையில் ஏற்கனவே ரூ.1200 கோடிக்கும் மேலாக நட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் கூடவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இதுதொடர்பான முடிவை எடுக்கும்படி நிதியமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.