டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை தூண்டியதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட 7 பேர் மீதுடெல்லி காவல்துறை தேசத்துரோகம் உள்படபல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதை ரத்து செய்யக்கோரி அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு மாதங்களை கடந்தும் போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையில், குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி அன்று, விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்பை மீறி டிராக்டர் பேரணி நடத்தினர். செங்கோட்டைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது சர்ச்சையானது. இந்தவன்முறையின்போது காவல்துறையினர் ஏராளமானோர் தாக்கப்பட்டதுடன், பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், போராட்டத்தை தூண்டும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்பட 7 பேர் மீது டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், மத்தியப் பிரதேச காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் , பத்திரிகையாளர்கள் மிருனல் பாண்டே, தோஃபர் ஆகா, பரேஷ் நாத், அனந்த் நாத் உள்பட ஏழு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.